இராஜராஜேஸ்வரம் 1000

பத்மபூஷண் டாக்டர் பத்மா சுப்ரமண்யம் அவர்களை என் தந்தையார் எனக்கு 1976ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தினார். ஒருநாளும் இல்லாத திருநாளாய் என் தந்தையார், அவரிடம், “என் பையன் ஜோரா கவிதை எழுதுவான். கேக்கறேளா?” என்றார். ஏதோ வம்பில் அகப்பட்டுக்கொண்ட துன்பத்தை நாசூக்காக...

Brihadeeswarar Temple at Thanjavurபத்மபூஷண் டாக்டர் பத்மா சுப்ரமண்யம் அவர்களை என் தந்தையார் எனக்கு 1976ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தினார். ஒருநாளும் இல்லாத திருநாளாய் என் தந்தையார், அவரிடம், “என் பையன் ஜோரா கவிதை எழுதுவான். கேக்கறேளா?” என்றார். ஏதோ வம்பில் அகப்பட்டுக்கொண்ட துன்பத்தை நாசூக்காக மறைத்துக்கொண்ட அந்தக் கலையரசி “ஓ! கேட்கலாமே!” என்றார்.

நான் கேட்டது ஐந்து நிமிடங்கள். அவர் கொடுத்தது ஒருமணி நேரத்திற்கும் மேல்!

அன்றிலிருந்து இன்றுவரை ஒரு தமக்கை, தனது தம்பியை எப்படி நடத்துவாளோ அப்படியேதான் பாசத்துடனும் அக்கறையுடனும் அவ்வப்போது கவலையுடனும் என்னை நடத்தி வருகிறார்.

என் தந்தை மீது பெருமதிப்புக் கொண்ட அவரது குடும்பத்தில் நானும் ஒருவன் என்பது மிகையல்ல. நாட்டியத்தைப் பற்றி எந்தவிதமான அறிவோ மரியாதையோ இல்லாதிருந்த நான் அவரது `மீனாட்சி கல்யாணம்` நாட்டிய நாடகத்தைக் கண்டு உயிர்சிலிர்த்தேன். மனம் தூய்மையானேன். அன்றே எனக்கும் அவர் `பத்தூக்கா` ஆனார். அவரது தமையனார் காலஞ்சென்ற திரு பாலகிருஷ்ணன் அவர்களும் மன்னி திருமதி சியாமளா அவர்களும் என்மீது மாறாத நேசம் பொழிந்தார்கள்.

ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, நான் பத்தூக்காவை அடிக்கடி சந்திக்கவில்லை. நான் வெளியூர்களில் இருந்தது ஒரு காரணம். மிகவும் புகழ்பெற்றவர்களை நானாக நெருங்குவதில்லை என்னும் என் இயல்பான மனப்பான்மை ஒரு வலுவான காரணம். ஆனால், என் நண்பர்களிடம் அவர் என்னைப் பற்றி விசாரித்துக்கொண்டேதான் இருந்தார்.

இருபது ஆண்டுகள் விசாகப்பட்டினத்தில் வசித்த நான் 2009 நவம்பரில் சென்னைக்குக் குடியேறிய உடன், அவரைச் சந்தித்தேன். என்னுடைய பல்லாண்டு கால இலக்கிய, சமூக அஞ்ஞாத வாசத்தை ஒரே மாலைப்பொழுதில் ஒரேயடியாக முறித்தார்! ஆம், தஞ்சைப் பெரிய கோவிலின் 1000 மாவது ஆண்டு விழாவில், அவர் 1000 க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களைக் கூட்டிவந்து நடத்திய நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்குமாறு அன்புக் கட்டளையிட்டார். விழாவில் சில தவிர்க்க முடியாத தாமதம் ஏற்பட்டதால், அதைச் சமாளிக்க நான் கவிதைகளை நினைவுகூர்ந்து முழங்கியது என்னை ஒரேநாளில் உலக வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது.

அவ்விழாவின் வீடியோ காட்சிக்களை இங்கு காணலாம்:

அந்த மறக்க முடியாத நிகழ்ச்சியில் நான் எடுத்த புகைப்படங்கள் இதோ!

இராஜராஜேஸ்வரம் 1000
   


Popularity: 6% [?]

About ரமணன்