அம்மா உந்தன் இடுப்பில்தான்
அல்லும் பகலும் வாழ்கின்றேன், உன்
அசைவுக் கெல்லாம் இசைவாகத்தான்
அயர்ந்து விடாமல் ஆடுகிறேன்
அணைப்பின் கணப்பில் சிலநேரம்
அனைத்தும் மறந்து பாடுகிறேன்
அம்மா எங்கே என்றேனோ
அடிக்கடி உன்னைத் தேடுகிறேன்!
என்ன செய்வாய் தாயே நீ
இப்படியும் உனக்கொரு பிள்ளை!
ஏதும் வார்த்தை பேசாமல்
என்னைப் பார்த்த படியிருப்பாய்
மின்னற் புன்னகை செய்திடுவாய்
மேல்நெஞ் சுவரை மூச்சிடுவாய்
மீளா தழுமெனை இடைமாற்றி
மென்விர லால்சிறு தலைகோதி
சின்னப் பாடல் முணுமுணுப்பாய், அதன்
சித்திரம் சொல்லில் வருமுன்னே
சிறுதுயி லுக்குள் எனையிறக்கி
சிற்றடுப் புலையை ஊதிடுவாய்!
எத்தனை ஊழிகள் போனாலும், உன்
இடுப்பை விட்டு இறங்காமல்
பத்திர மாய்த்தான் இருக்கின்றேன்!
அடிக்கடி பார்த்துக் கொள்கின்றேன்!
எத்தனை குளியல் அலங்காரம்!
எத்தனை உடைகள் மாற்றுகிறாய்!
எல்லாம் இடுப்பில் நடக்கிறது
எங்கோ பயணம் தொடர்கிறது
ஓரத்தே ஒரு சின்னமலர், அதில்
ஒருதுளித் தேன்தான் வாழ்கிறது
அதிலொரு சிறுதுளிக் காகத்தான்
அத்தனை வண்டும் வாழ்கிறது
பாரம் எனநீ நினைக்காமல்
பார்ப்பதனால் கதை நடக்கிறது
பகலும் இரவும் இதுதான் அம்மா
பாட்டாய் விரிந்து கிடக்கிறது!
நெஞ்சில் நீதான் என்செல்வம்
என்றும் உனக்கு நான்செல்லம்
நேரம் முழுதும் உன்னினைவில்
நெகிழ்ந்துருகட்டும் என்னுள்ளம்
எஞ்சிய கதையை யாரறிவார்?
எனக்கே அதிலே சுவையில்லை
இடுப்பை விட்டு இறக்காதவரை
என்றும் எதுவும் குறையில்லை!
Popularity: 4% [?]
