காமம் தடையென்பார்! அட
கட்டிய மனைவி தொட்டிலில் பிள்ளையும்
கட்டி இறுக்குமென்பார்
சேமம் தடையென்பார்! நீ
சேர்த்த பொருள்களும் செலவும் கட்டோடு
சேற்றினில் தள்ளுமென்பார்
ஓமம் தடையென்பார்! தீ
ஓங்கிய வேள்வியில் ஓங்கிய புண்ணியம்
உன்னைத் தடுக்குமென்பார்!
நாமம் தடையென்பரோ! உன்னை
நம்பிக் கிடக்கின்ற நல்லவர் நெஞ்சினில்
நஞ்சை விதைப்பாரோ?
கண்ணைப் படைத்தவள் பெண்ணைப் படைத்தவள்
காதலையும் படைத்தாள்! வண்ணக்
கவிதைக ளைப்படைத்தாள்!
கால மெனும்நெடுஞ் சோலையி லேநம்மைக்
கவின்மல ராய்ப்படைத்தாள்! உதிர்ந்து
காற்றில் பறக்கவிட்டாள்!
வண்ணக் களஞ்சியக் கிண்ணமடா இதில்
வாழ்வு தனியொன்றில்லை! எந்தத்
தாழ்வும் உயர்வுமில்லை! அட
விண்ணைப் படைத்தவள் மண்ணைப் படைத்தவள்
தானென்னை யும்படைத்தாள்! என்னில்
தங்கிப் புடைத்தெழுந்தாள்!
எத்தனை இன்பங்களோ! பல
இற்றுவி ழும்சில நின்று நகும்போது
என்னென்ன துன்பங்களோ!
எத்தனை கோலங்களோ! அவை
வெட்டும் மின்னல் விண்ணைக் கொட்டிக் கிழிக்கையில்
என்னென்ன ஓலங்களோ!
எத்தனை பாசங்களோ! அதில்
ஏய்த்திடும் வேசங்கள் சோகங்களை மீறி
என்னென்ன நேசங்களோ!
அத்தனையும் அவளே! அவை
யாவும் சுகமே யாவும் நலமே
யாவும் அவள் விதமே!
வானை அடைந்திடப் பாதைகளா அட
மோனத்தை மூட்டுவதா? பின்னர்
மூச்சினில் பேணுவதா?
வண்ணப் பதம்ரெண்டு வாசற் தெருவினில்
வந்து நடிக்கையிலே, இன்னமும்
வார்த்தைகள் தேடுவதா?
சேனைத் தலைவர்கள் பெம்மையெல்லாம் அவள்
சிட்டிகை ஆணையன்றோ! அவள்
சிட்டுக் குருவியன்றோ! இங்கு
செய்வது நானில்லை என்னும் தெளிவை
எய்திய சித்தத்திலே அவள்
இன்பத்தின் முத்தமன்றோ!
வீடு வசப்படுமா? துண்டை
வீசித் திண்ணை மீது நீட்டிப் படுக்காமல்
விழித்துச் சோர்வதுவா?
பீடு சுகம்தருமா? இது
பிச்சியின் ராஜ்ஜியம்! பெருமையும் சிறுமையும்
பின்னிக் கிடக்குதன்றோ!
காடு விடைசொல்லுமா? இந்தக்
காட்சி மயத்தினில் காணாத ஒன்றிரு
கண்மூடித் தென்படுமா?
நாடு தாயின்பதமே! இங்கு
நரகமும் சொர்க்கமும் கும்மி அடிக்கட்டும்
நாமிருப்போம் சுகமே! நாள்
நம்பிச்செல்லும் நிதமே!
ஆவியின் மர்மத்தில் ஆயிரம் கர்மத்தில்
ஆன்றோரின் தர்மத்திலே, அவரை
ஆளும் சுதர்மத்திலே
அறிவினிப் போலறி யாமை யனைத்திலும்
ஆட்சி புரிகின்றாள்! அன்னை
யாவையு மாகிநின்றாள்!
தேவி பராசக்தி தரிசனத்தால் அந்தத்
திரைகள் கிழிந்ததம்மா! ஈரத்
திரிகள் ஒளிர்ந்ததம்மா! இன்னும்
தேடி இளைத்திட ஏதுமில்லை இதுவும்
தெய்வத்தின் எண்ணமம்மா! அது
தெருவினில் திண்ணையம்மா!
Popularity: 6% [?]
