என்ன பெயர் வைப்பதோ?

நெடிய எழுந்து வளர்கிறாள் – என்
நித்திரை கலைத்து நிற்கிறாள்
கொடிய கனவின் முடிவிலே – மனம்
கொஞ்சும் கோலம் விரிக்கிறாள்
படிய வில்லயே யாரென – இந்தப்
பராசக்தி பெயர் யாதென
முடியவில்லையடி அம்மணி – நிதம்
மூண்டு குழப்பிடும் கண்மணி

செய்ய சிங்கமிவள் பின்னணி – அதன்
செம்மை சொல்லவழி இல்லையே
மைய விழ்ந்ததிரள் கூந்தல்தான் – வீழ்ந்து
மீளும் வழியற்ற உயரமே
பைகிழிந்த வொரு குங்குமம் – அதன்
சித்தம் போல்புரளும் வானமே
பொய்விழுந்தவொரு பொலிவுபோல் – சம்
பூர்ணமாகவே நிற்கிறாள்!

இருகரங்களும் சித்திரம் – அதில்
இசைந்த வங்கிருத் ராக்‌ஷமே
ஒருகரத்தில் சின்முத்திரை – அதில்
மூன்று விரல்மூடிக் கொண்டதே
திருமகள் போல் தோன்றுவாள் – கலைத்
திரளின் முத்திரை காட்டுவாள்
கருவமிக்கதொரு துர்க்கையாய் – ஒரு
காட்சி சிங்கத்தில் காட்டுவாள்

இன்ப வெள்ளத்தை அமைதியை – என்
இதய மடுவூறும் இசையினை
அன்பு விகசிக்கும் தெளிவினை – உள்
ஆழ்ந்த கமலத்தின் ஒளியினை
என்னில் நின்றுவளர் வாழ்வினை – களி
ஏறி வளர்கின்ற தீயினை
இன்னும் என்னபெயர் சூழுமோ? இது
எந்தப் பெயர்வைத்து நிற்குமோ!

Popularity: 4% [?]

About ரமணன்