கலைமகளே!

ஒவ்வொரு சொல்லும் உன் பிச்சை, அது
சொல்லும் பொருளும் உன் இச்சை
உயிரின் முனையே உன்கொற்றம், அது
உன்திரு முகத்தின் ஒளிமுற்றம்
கவ்விய வாயில் கண்மூடிக்
கவலை இலாமல் வாழ்கின்றேன்
காலை அசைக்கும் கதிரழகே! என்
கவிதையில் மிகவரும் கலைமகளே!

வீதியில் உன்குரல் கேட்கிறது! சிறு
விதையின் வெடிப்பும் விழுகிறது!
வீணையில் விரல்கள் விளையாடும்
விந்தை, வாழ்வாய் விரிகிறது
பாதியில் மயங்கும் பாட்டினிலும், உன்
பாதச் சதங்கை தொடர்கிறது
பலவிதம் ஒலியாய் விரிபவளே! என்
பாட்டில் மிகவரும் கலைமகளே!

பாட்டுக் கேங்கும் நெஞ்சினிலே, உன்
படுக்கை விரிந்து கிடக்கிறது, ஒரு
பார்வைக் கேங்கும் உயிரினிலே, ஸ்வரம்
பவழ மல்லியாய் உதிர்கிறது
கூட்டுக் குள்ளே நிலையாகி, நடுக்
கூடத் தினிலே நடமாடி
குறுநகை செய்யும் பரவசமே! என்
குரலில் மிகவரும் கலைமகளே!

காத்தி ருப்பதே தவமென்றால், எனைக்
காட்டிலும் தவமுனி யாரிங்கே!
கண்பனிப்பதே வரமென்றால், பொங்கும்
கடல்கள் யாவும் எனதிங்கே!
கார்மழை யின்துளிக் கருணையிலே, என்
காலம் இன்னும் தொடர்கிறது, நீ
பார்த்துப் போட்டால் பிழைக்கின்றேன், என்
பார்வையில் மிகவரும் கலைமகளே!
மண்டையிலே ஒரு சில்வண்டு, என்
மனதை நிறுத்திச் சிரிக்கிறது
மலையில் வனத்தில் சீழ்க்கையொலி, அது
மண்டையில் கலந்து நடிக்கிறது
அண்டம் முழுதும் ஒருநாதம்! உன்
அழகிய விரல்முனை வரும்கீதம்!
அடிமையின் நெஞ்சினில் மிகமோதும்!
அதிலது வாய்வரும் கலைமகளே!

Popularity: 3% [?]

About ரமணன்