காக்க வைப்பதோ தேவியே

பெண்ணில் விளங்கும் தாய்மை நீ, அதைப்
பேணி வாழும் ஆண்மை நீ
கண்ணில் வளரும் காதல் நீ! நல்ல
கவியில் ஒலிக்கும் கீதம் நீ
எண்ணில் வெட்டும் மின்னல் நீ
ஏழை நெஞ்சில் வண்மை நீ
எண்ணி லாத விதத்திலே, எழில்
ஏற விளங்கும் தேவியே!

கண்ணில் பட்டது கையிலே!
கருத்தில் வந்தது மெய்யிலே!
புண்ணி யங்கள் பண்ணவும், தினம்
புதியர் பலரும் உண்ணவும்
வண்மை என்னில் வளரவும், பலர்
வாழும் படிநான் வாழவும்
எண்ணி லாத பொருட்குவை, எனக்
கிசைய வேணும் தேவியே!

உன்னை எண்ணும் நொடியிலே, என்
உள்ள மெங்கும் எழில்மயம், தீ
பொன்னில் நுழைந்தது போலவே, ஒரு
பொலிவு தோன்றும் பிறையிலே
மன்னும் எழிலார் உணர்வுகள், நெஞ்சில்
மண்டும் அழகின் இயல்புகள்
என்னில் ஒளிரும் ஆவியே! என்
எதிரில் தோன்றிடு தேவியே!

வஞ்ச உலகில் காசுதான், இந்த
வாழ்வை ஆளும் பாஷையாம்
கொஞ்ச நஞ்சம் அல்லவே, அது
கொண்டும் அன்றியும் கொடுமைகள்!
பஞ்சம் நெஞ்சினில் வந்தபின், அதில்
பண்பில் ஒருதுளி மிஞ்சுமோ?
கஞ்ச மலரடி பணிகிறேன், எனைக்
காக்க வேண்டும் தேவியே!
வந்து நிற்போர் தேவைகள், என்
வாசல் தொடுமுன் தீர்கவே!
பந்து பழகும் பிள்ளைபோல், இந்தப்
பணத்தை என்மனம் ஆள்கவே!
சொந்த பந்தம் ஏதடி, கையில்
சொல்லும் படிக்கா சில்லையேல்?
வந்து சேர்வாய் அன்னையே! நல்
வாழ்வு தந்திடு தேவியே!

கவியும் திருவும் இணைந்திடா தெனும்
பழைய வசையினிக் கழியவே!
புவியில் அனைவரும் போற்றவே, நான்
பொற்கவிக் கோ ஆகவே!
அவிக ளாயிரம் விரியவே! சுகம்
யாவும் தெளிவாய்த் தெரியவே!
கவிக ளோடுனை நாடினேன், எனைக்
காக்க வைப்பதோ தேவியே?

Popularity: 4% [?]

About ரமணன்