வாணிவரும் நேரம்!

நெஞ்சத்தின் ஆழத்தில் நெகிழ்வொன்று நேரும்
நிலைசொல்ல முடியாத நிலையொன்று சேரும்
கொஞ்சத்தில் கிட்டாத குரலொன்று கேட்கும்
கூர்முனையில் உயிர்நிற்க உணர்வும் சிலிர்க்கும்
பஞ்சுத் துகள்போல பரவும் புகைபோலப்
பலவாறு மர்மத்தில் மனவாழம் தெரியும்
பழகியும் தீராத பரவசம்! பாரம்!
பாறையில் ஈரம்! வாணிவரும் நேரம்!

வானமிவள் வாசல் வையமொரு சன்னல்
வாய்த்தோர்க்கும் விளங்காத வாக்கிவளின் ஊசல்
கானமிவள் அன்னம் கவிதைமுக வண்ணம்
கலையெலாம் கார்கூந்தல் ஆற்றிடும் கூடம்
ஊனமுடி யாவிதையின் உச்சாணிக் கொப்பு
உச்சத்தில் அமிழ்துவிழு தூறிவரும் நிலவு
மானவனின் சிறுநெஞ்சம் மணிவீணை யாகும்
மார்புபட படவெங்கும் வாணிவரும் நேரம்!

மென்விரல் ஓடிவிளை யாடிவரும் நெஞ்சம்
மீட்டிலே உயிர்போகும் மிஞ்சினால் உயிரேங்கும்
தன்னினைவு தீர்ந்துமனம் தளர்ந்ததோர் லஹரியில்
தரைமீது வான்வந்து தவழும்குரல் கேட்கும்
பொன்னருவி நடனம் பூவிற் சதங்கை
புவனங்கள் பூக்கின்ற தெளிவென்னும் கண்கள்
அன்றுபோல் புளகத்தில் இன்றும்மனம் பதறும்
அதிசயம் நிலையான வாணிவரும் நேரம்!

சொன்னசொல் சொல்லுஞ்சொல் சொல்லாத சொல்லும்
சொல்லில்வரும் சுருளும் சொல்லேந்தும் பொருளும்
என்றைக்கும் சொல்லிலே நேராத தெளிவும்
சிறுசொல்லில் இருளெலாம் தீர்கின்ற ஒளியும்
நின்றொளிரும் சொல்லின்பின் நீள்கின்ற மெளனத்தின்
சின்னநிழ லேந்திவரும் சித்திரச் சொல்லும்
அன்றிவே றறியாத அதுவாழ்க்கை யாகும்
அதிலெந்த நிமிடமும் வாணிவரும் நேரம்!

அன்றுபோல் என்றென்றும் மாறாத புதுமை
அசையாமல் உயிர்மீட்டும் அதிசயப் பதுமை
என்னுயிரின் சிறுகுடிலில் ஏதுக்கு வந்தாள்?
இன்றுவரை தனிமையினில் என்னென்ன தந்தாள்?
சென்றெங்கும் இதுவிவரம் செப்பமுடியாது
சின்னங்கள் பின்னங்கள் இல்லாத உறவு
என்தெருவின் பொன்வளைவில் பூவுதிரும் ஈரம்
என்னில் தன்னைத் தீர்க்க வாணிவரும் நேரம்!

Popularity: 3% [?]

About ரமணன்