விரிவாகப் புரிந்தது வேதம்!

அவளுக்குத் தோன்றும் பொழுது
அழகழகாய் விடியும் பொழுது
அலைமீதில் சரிகைகளாக
அகமெங்கும் கவிதைகளாக
தவமுள்ளே தரிசனமாக
தவறுள்ளே ஒரு தெளிவாக
சரிதவறுகள் அறியாதழகாய்
விரையும் சிறு குருவிகளாக………………

அவளுக்கு வேண்டும் போது
அணுவளவும் தாமதமேது?
அண்டங்கள் ரெண்டுபடலாம்
அம்பலத்தை மழலை தொடலாம்
சுவருக்குச் சிறகுமுளைத்துச்
சொர்க்கத்தில் இறக்கிவிடலாம்
சுடுகஞ்சிக் கேங்கும் வீட்டில்
சொர்ணமழை விடாதுபெயலாம்

அவளுக்கு நீதிகள் ஏது?
அதிரடியில் நியதிகள் ஏது?
அலையடித்துப் பெண்டுகள் கூட்டம்
கலைத்தாடும் சோழிகள் யாவும்!
திவலையினால் ஊரேமூழ்கும்!
திரிமுனையில் இருளே மாயும்!
திசைகிழிந்த தெருவின் முனையில்
சிறுமியிவள் சதங்கை கேட்கும்!

பலகோடிக் கதிர்கள் சுழலும்
பரிவான கண்களி லேனோ
பாலகனின் சிற்றிருள் நீக்கும்
பார்வையின்னும் நேர்ந்திடவில்லை
சிலநேரம் இதையெண்ணுங்கால்
சித்தத்தில் வியர்வை துளிர்க்கும்
செய்வதின்றிச் சாயும்போது
சிற்றிதழ்கள் முறுவல் பூக்கும்
அழகொன்றே இவளின் இயல்பு
யாவையுமே இவளில் அழகு
அறிவைப்போல் அறியாமைக்கும்
ஆசனத்தின் பீடுகள் உண்டு
பழகத்தான் இவள்விதம் புரியும்
பருகப் பருக தாகம் பெருகும்
பாசமுள்ள தாய்தான், கொஞ்சம்
பகட்டிருந்து போனாலென்ன?

என்துன்பம் துன்பம்தானா?
என்னின்பம் இன்பம்தானா?
என்றகேள்வி எழுந்தபோது
என்சிறுமை விழுந்தபோது
முன்தெரிந்த முதுகை ஒசித்து
முகமலரைச் சற்றே திருப்பி
கன்னத்தில் மின்னல் மயங்கக்
கதைகள் நூறு சொன்னாளம்மா!

நதிதயவே மீனின் நடனம்
நாளும் இரவும் தொடரும் சலனம்
நானில்லை என்றதும் நீங்கி
நானொன்றே என்பதும் நீங்கி
விதியறவே நீங்கிப் புதிதோர்
வெள்ளத்தில் மலராய் வீழ்ந்தேன்
வீழ்ந்த இடம் திருவின் பாதம்
விரிவாகப் புரிந்தது வேதம்!!

Popularity: 4% [?]

About ரமணன்