கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்

Konjam kavithai konjam theneerஒருநாள் பொதிகைத் தொலைக்காட்சியிலிருந்து ஓர் அழைப்பு வந்தது. ஒரு கவியரங்கம், அதற்குப் பார்வையாளராக வருகவென்று. அதில், என் இனிய நண்பர் மரபின் மைந்தன் முத்தையா பங்குகொள்வதாலும், அழைப்புக் கடிதத்தின் கீழே கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி கையெழுத்திட்டிருந்ததாலும் சென்றேன். மிகவும் மகிழ்ந்து வரவேற்றார். முத்தையா, மதுரைப் பகுதியிலிருந்து வந்திருந்த திருமதி சக்தி ஜோதியை அறிமுகம் செய்தார். தஞ்சை இனியனும் பங்குகொண்டார். திரு காதர் தலைமையில் கவியரங்கம் நடந்தது.

பிறகு, விடைபெறும் தருணம், ஆண்டாளின் கணவர் திரு பாலாரமணி அவர்கள் தேநீர் அருந்த அவருடைய அறைக்கு அழைத்தார். அங்கே, முத்தையா, `ரமணன்! தேநீர் வரும் வரை ஒரு பாட்டுப் பாடுங்களேன்,` என்றார். ஒன்று, இரண்டு என்று தொடர்ந்தன பாடல்கள். தேநீரும்தான்.

பின்னால் பார்த்தால், ஆண்டாள் விழிமுழுதும் கண்ணீர். “இத்தனை நாட்கள் நீங்கள் எங்கே இருந்தீர்கள்? மக்களிடமிருந்து இதையெல்லாம் எப்படி மறைத்துவைத்திருந்தீர்கள்? இருங்கள், உங்களை, உங்கள் பாடல்களை மையமாக வைத்தே பொதிகையில் ஒரு நிகழ்ச்சி செய்கிறேன்”.

“..ஏதோ இரக்கமுள்ள நண்பர்கள் நடுவே பாடுவேனேயொழிய பொதுமேடையில் சங்கீத வன்முறையில் ஈடுபடும் அளவுக்கு மனிதாபிமானம் இல்லாதவன் இல்லை; ஸ்ருதியோடு பாடவராது; இசைக்கருவிகளுடன் பாடவே தெரியாது”, என்று என்னென்னவோ சொல்லிப் பார்த்தேன். நூறு தடாவில் அக்கார அடிசில் சொன்னது சொன்னதுதான் என்பதுபோல் உறுதியாய் நின்றார் ஆண்டாள்.

எத்தனையோபேர் என்பாட்டைக் கேட்டுவிட்டு இப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு ஏதேனும் சொல்வார்கள். போகப்போக எல்லாம் சரியாகிவிடும் என்றுதான் நினைத்தேன். ஆனால், ஆண்டாளுக்கு அண்ணனாக, வேண்டுதலை நிறைவேற்றும் ராமானுஜராக ஆகப்போகிறது கதை என்பதை அப்போது அறியவில்லை.

ஆண்டாள் அழைத்தார்; அத்தோடில்லாமல், எவ்வளவு இயல்பாக ஒரு நிகழ்ச்சியில் இருக்க முடியுமோ அவ்வளவு சுதந்திரமும் கொடுத்து அன்பு காட்டினார். தான் ரசித்து நெகிழ்ந்தது மக்களைச் சென்றடையவேண்டும் என்பதைத்தவிர அவருக்கு வேறு சிந்தனை இதில் இல்லை. மேலும், முதலில், முத்தையாவோடும், நான் வணங்கி நேசிக்கும் திருமதி ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களோடும் என்னை உட்கார்த்திவைத்தது, இமயத்தின் மடியில் நான் அமர்ந்திருப்பதுபோல் செட்டுப்போட்டது, இவையெல்லாம் ஆண்டாளின் அன்பன்றி வேறென்ன?

“கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்” நிகழ்ச்சி ஒவ்வொரு திங்கட் கிழமையும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிவருகிறது. அதன் மறு ஒளிபரப்பு, ஒவ்வொரு சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு வருகிறது.

வீதியில், கோயிலில், ரயில் விமான நிலையங்களில், பொதுக்கூட்டங்களில், முகம்தெரியாத எத்தனையோ அன்பர்கள் தேடிவந்து பாராட்டிச் செல்வதும், பொதிகையைத் தொடர்புகொண்டு என் எண்ணை வாங்கி என்னுடன் பேசுவதும் எனக்குக் கடிதம் எழுதுவதும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது. பொதிகயைத் தவிர வேறு யாரேனும் இப்படி ஒரு நிகழ்ச்சியை, அதுவும் தொடர்ந்து, செய்வார்களா என்றே ரசித்தவர்கள் வியக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் என்னோடு பங்குகொள்வோர்கள் எல்லோரும் எனக்கு நெருங்கிய நண்பர்களாகிவிட்டார்கள்.

அனைத்து நன்றியும், என் சகோதரி ஆண்டாளுக்கே!

சில பதிவுகளை இதோ உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்:

Popularity: 30% [?]

About ரமணன்